நகைச்சுவைக் கதைகள், நீதிக்கதைகள், திருக்குறள் விளக்கக் கதைகள், மூதுரைக் கதைகள், ஆன்மிகக் கதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறு, அறிவியல் என்று சிறுவர் இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் புத்தகங்கள் எழுதியவர் அவர். கருட புராணம், தேவி திருவிளையாடல், 108 திவ்ய தேசங்கள், ராமாயணம், பகவத் கீதை விளக்கம் என்று பெரியவர்களுக்கான ஆன்மிகப் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தவர். 80 வயதிலும் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் அவர்
ஆர். பொன்னம்மாள். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீடு முழுக்கப் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன.
ஏழு வயதில் அப்பாவை இழந்தார். நாள் முழுவதும் வேலை செய்து, இவரையும் இவருடைய தங்கையையும் வளர்த்தார் அம்மா. வறுமையால் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த பொன்னம்மாளுக்கு இது மிகுந்த வலியைத் தந்தது. தனிமையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை பெற புத்தகங்களுக்குள் தஞ்சமடைந்தார். தோழிகளிடமும் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடமும் கடனாகப் புத்தகங்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்.
“ரொம்ப நல்லா படிப்பேன். ஆனால், படிப்பைத் தொடரும் சூழல் வாய்க்கவில்லை. எங்கள் மீது பாசம் காட்டும் அளவுக்கு அம்மாவுக்கு நேரம் இருந்ததில்லை. அவர் கடின உழைப்பாளி. வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள்ள அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். என் தோழி வீட்டில் அம்புலிமாமா படிப்பதற்காகவே ஒரு மணி நேரம் முன்னாடியே பள்ளிக்குக் கிளம்பிடுவேன். அட்டகாசமான படங்களுடன் வரும் சித்திரக் கதைகள், கல்கியின் பொன்னியின் செல்வன், லட்சுமியின் பொன் மனம், காஞ்சனையின் கனவு, பவானி போன்ற கதைகள் எல்லாம் என் கற்பனைக்குத் தீனி போடுவதாக அமைந்தன. இப்படிக் கதைகளைப் படித்துப் படித்தே ஒரு கட்டத்தில் நானே சொந்தமாகக் கதைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்” என்று சொல்லும் பொன்னம்மாள், பேச்சிலும் அசத்துகிறார். கதைக்காகவும் கதை சொல்லும் நேர்த்திக்காகவும் குழந்தைகள் எப்பொழுதும் இவரை மொய்ப்பார்கள்.
தோழியின் ஊக்கம்
“தங்கையும் அவளுடைய தோழிகளும்தான் என் கதைகளுக்கு முதல் வாசகர்கள். அப்படி ஒருமுறை என் கதைகளைக் கேட்ட தோழி ருக்மணி, என்னைச் சிறுகதை எழுதத் தூண்டினாள். அவள் கொடுத்த ஊக்கத்தால் கண்ணன் இதழுக்கு ‘மீண்ட சொர்க்கம்’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பினேன். அந்தக் கதைக்கு மூன்று ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது. அந்தச் சிறு அங்கீகாரம்தான் என்னாலும் எழுத முடியும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது” என்று சொல்லும்போது இன்றும் அந்த மகிழ்ச்சி முகத்தில் படர்கிறது.
அப்போது அவருக்கு வயது 19. இரண்டாவது கதை ‘தமிழ்நாடு’ இதழில் வெளியானது. ஆசிரியர் கரு. முத்தையா நேரில் சந்தித்து, தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிறகு இவரது படைப்புகள் பிரபல வார இதழ் களில் வெளிவர ஆரம்பித்தன. ஆர். மாலதி என்ற புனைபெயரிலும் எழுத ஆரம்பித்தார்.
எழுத்துக்கு வந்த தடை
திருமணத்துக்குப் பிறகு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, படிப்பதற்கும் எழுதுவதற்கும் நேரம் ஒதுக்குவதை வழக்கமாக்கிக் கொண்டார் பொன்னம்மாள். ஆனால், அவர் எழுது வதை மாமனார் அனுமதிக்கவில்லை.
“அந்தக் காலத்தில் பெண்கள் மீது இருந்த பிற்போக்கான கருத்துகள் என் மாமனாரிடமும் இருந்தன. அவர் என்னை எழுத வேண்டாம் என்று சொன்னதும் மீண்டும் வெற்றிடம் சூழ்ந்துகொண்டது. யோசித்தேன். எழுத்தா குடும்பமா என்று வரும்போது குடும்பமே முக்கியம் என்று முடிவெடுத்தேன். என் மாமனார் வாழ்ந்த காலம்வரை என் படைப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அவருடைய மறைவுக்குப் பிறகு என் கணவர் என்னை மீண்டும் எழுத ஊக்கப்படுத்தினார். என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! நான் விரும்பிக் கேட்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிடுவார்” என்கிறார்.
எளிமையும் அழகும் நிறைந்தவை பொன்னம்மாளின் எழுத்துகள். பெரியவர்களுக்கான ஆன்மிகப் புத்தகங்களை ஏராளமாக எழுதியிருக்கிறார். இரண்டு தொகுதிகளைக் கொண்ட ‘தமிழகத் திருக்கோயில்கள் வரலாறும் வழிபாடும்’, ‘ஆறுபத்தி மூன்று நாயன்மார்கள் வரலாறு’, ‘ நாலாயிர திவ்யப்பிரபந்தம்’, ‘ பாண்டுரங்கன் மகிமை’, ‘கருட புராணம்’, ‘நாலடியார் - திருக்குறள் நன்னெறிக் கதைகள்’, ‘ மங்கையருள் மாணிக்கம்’, ‘இன்னா நாற்பதின் இனிய கதைகள்’, ‘சக்தி பீடங்கள் 108’, ‘தென்னக சிவஸ்தலங்கள்’ போன்றவை அவற்றுள் முக்கியமானவை. குடும்பக் கட்டுப்பாடு குறித்து இவர் எழுதிய ‘கசந்த இனிப்புகள்’என்ற சிறுகதைக்கு மத்திய அரசு விருது கிடைத்திருக்கிறது. மாநில அரசு விருதுகளோடு தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருதையும் பெற்றுள்ளார்.
தொடரும் பயணம்
முதுமை இவரை வீட்டுக்குள் முடக்கிவிட்டாலும் எழுதுவதற்கும் படிப்பதற்கும் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார்.
“என்னைச் சாப்பிடாமல் இரு என்றால் இருந்துவிடுவேன். ஆனால் எழுதாமல், படிக்காமல் இரு என்றால் முடியாது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்றவர், ‘ஆழ்கடலின் அதிசயங்கள்’ என்ற நூலை எழுதி முடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். இவரது நூல்களை மட்டுமல்ல, இவரது பேச்சைக் கேட்டாலும் புத்துணர்ச்சி கிடைக்கிறது, தன்னம்பிக்கை பிறக்கிறது!