வரும் 2024-ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘உலக மக்கள் தொகை வாய்ப்பு கள்: 2017-ம் ஆண்டின் திருத்தம்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியர்களின் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் கடந்த 50 ஆண்டு களில் பாதியாகக் குறைந்துள்ளது. அதாவது இப்போது சராசரியாக ஒரு பெண்ணுக்கு 2.3 குழந்தை பிறக்கிறது. இது 1970-களில் 4.97 ஆக இருந்தது. அதேநேரம், கடந்த 25 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரித்து 69 ஆக உள்ளது. இது 1990-ல் 59 ஆக இருந்தது.
இதனால், இப்போது 134 கோடியாக உள்ள இந்திய மக்கள் தொகை அடுத்த 7 ஆண்டுகளில் (2024) 144 கோடியாக அதிகரிக்கும். இதன்மூலம் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும். இப்போது 2-ம் இடத்தில் உள்ளது.
இதுபோல இப்போது 141 கோடியாக உள்ள சீனாவின் மக்கள் தொகை 2024-ல் சற்று அதிகரித்து 144 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு இந்திய மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து 2030-ல் 150 கோடியாகவும் 2050-ல் 166 கோடியாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் 2030 வரையில் சீன மக்கள் தொகையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதன் பிறகு குறையத் தொடங்கும்.
2050-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மக்கள் தொகை குறையத் தொடங்கும். இதன்படி 2100-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 150 கோடியாகக் குறையும். அதாவது சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 2030 வாக்கில் 2.1 ஆகவும் 2050 வாக்கில் 1.86 ஆகவும் 2100-ல் 1.78 ஆகவும் குறையும்.
இதுபோல உலக மக்கள் தொகை இப்போது 760 கோடியாக உள்ளது. இது 2030-ல் 860 கோடியாகவும் 2050-ல் 980 கோடியாகவும் 2100-ல் 1,120 கோடியாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்தங்கிய 47 நாடுகள் மக்கள் தொகை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 4.3 ஆக உள்ளது. இதன்மூலம் இப்போது மக்கள் தொகையில் 7-ம் இடத்தில் உள்ள நைஜீரியா 2050-ல் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 3-ம் இடத்துக்கு முன்னேறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment