சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இன்று காலை சென்னை திருவல்லிக்கேணியில் 27-எச் (27-H) என்ற பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துக்கு மாலை அணிவித்தும் பேனர் கட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் இருச்சக்கர வாகனங்களில் பாரதி சாலை வழியாக மாநிலக் கல்லூரி வரைக்கும் பேரணியாகச் சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் மாணவர்களை தடுத்து நிறுத்தியும்கூட அவர்கள் தொடர்ந்து பேரணியாகச் சென்றனர். பேருந்தின் மீது ஏறி நின்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடை உத்தரவு இருந்தும்..
சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்களில் சிலர் குழுவாக சேர்ந்து ஆண்டுதோறும் பேருந்து தினம் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது ஆட்டம் ஆடி, பாடல் பாடி சாலையில் பட்டாசு வெடித்து உற்சாகத்தை காட்டுகின்றனர்.
இதுபோன்ற கொண்டாட்டம் சில இடங்களில் வன்முறையாக மாறி விடுகிறது. எனவே இதுபோன்ற கொண்டாடங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தடையை மீறியும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.