காட்டுயிர் ஆய்வு என்றதுமே நம்மில் பலருக்கும் கற்பனையில் ஒரு காட்சி விரியும். பச்சைப் பசேலென இருக்கும் மலை, வானுயர்ந்த மரங்களைக்கொண்ட காடு, அந்தக் காட்டுக்குள் திரியும் புலிகள் (வெளிநாடு என்றால் சிங்கம்), தோளில் பைனாகுலருடன் ‘கேமோஃப்லேஜ்’ உடையணிந்துகொண்டு அவற்றைப் பின்தொடரும் மனிதர்கள் என்று அது நீளும்.
காட்டுயிர் என்றால் கற்பனையில்கூட நமக்குப் புலிகள்தான் நினைவுக்கு வருகின்றன. அது தவறல்ல. ஏனென்றால், இவ்வளவு காலம் புலிகள் மீது இந்திய அரசு செலுத்திய அக்கறையாலும் ஊடகங்கள் தந்த கவனத்தாலும் இந்த நிலை! இந்தக் காரணத்தால் புலி நம் மனதில் கவர்ச்சிகரமான காட்டுயிராகிவிட்டது. கவர்ச்சிகரமான காட்டுயிர் தவிர்த்து, மக்கள் அதிகம் விரும்பாத பாம்பு, குரங்கு, தேவாங்கு, வவ்வால் போன்ற பல விலங்குகள் இருக்கின்றன. இவை ‘லெஸ்ஸர் கரிஸ்மாடிக் ஸ்பீசிஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. அப்படியான காட்டுயிர்களில் ‘வாலில்லாக் குரங்கு’என்றழைக்கப்படும் கொரில்லாக்களும் ஒன்று. அவற்றைப் பற்றி ஆய்வு செய்ய அந்நாளில் ஆண்களே தயங்கிய நேரத்தில், ஒரு பெண் அவற்றை ஆய்வு செய்தது மட்டுமல்லாமல், அவற்றைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுத்தார்!
மருத்துவத்திலிருந்து இயற்கைக்கு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்ஃபிரான்சிஸ் கோவில் 1932-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிறந்தார் டயான் ஃபாஸ்ஸி. அம்மா, ஃபேஷன் மாடல். அப்பா, காப்பீட்டு முகவர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவிவந்தது. ஒருகட்டத்தில் அது விவாகரத்தை எட்ட, ஃபாஸ்ஸியின் தாய் மிகப்பெரிய தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஃபாஸ்ஸியின் இரண்டாவது தந்தை கொடுமைக்காரர். தாயிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் நாய், பூனை, மீன்கள் ஆகியவற்றின் மீது ஃபாஸ்ஸியின் கவனம் திரும்பியது. அவற்றின் மீது அன்பு செலுத்தினார். இப்படித்தான் அவருக்குள் விலங்குகள் மீதான கரிசனம் உருவானது.
‘ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்’ ஆகப் பணியாற்றிவந்த அவருக்கு, ஆப்பிரிக்காவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. 1963-ம் ஆண்டு அதற்கான காலம் கனிந்தது. அப்போது ஆப்பிரிக்காவில் ஆதிகால மானுடவியலாளராக இருந்த லூயி லீக்கி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மனிதர்களின் முன்னோர் குறித்து ஆய்வு செய்துவந்த அவர், ‘மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர்களின் மூதாதையர்கள் என்று சொல்லப்படும் வாலில்லாக் குரங்குகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்’ என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். வாலில்லாக் குரங்களில் ஒருவகையான சிம்பன்ஸி குறித்து ஆய்வு செய்ய அப்போது அவர் நிதியுதவி அளித்துவந்த நிலையில், கொரில்லாக்கள் குறித்து ஆய்வு செய்ய தகுதியானவரைத் தேடிவந்தார் லூயி. இந்தச் சூழலில்தான் லீக்கியும் ஃபாஸ்ஸியும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ஃபாஸ்ஸிக்கு கொரில்லாக்கள் மீது ஆர்வமிருப்பதைக் கண்ட லூயி லீக்கி, அவரை கொரில்லாக்கள் பற்றி ஆய்வு செய்ய உற்சாகமளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஃபாஸ்ஸி 1967-ம் ஆண்டு ருவாண்டா நாட்டில் ‘கரிஸோக் ஆய்வு மைய’த்தை நிறுவி, கொரில்லாக்களை ஆய்வு செய்யத் தொடங்கினார்.
கொரில்லாவுக்காக கொரில்லாவாக
கொரில்லாக்களை மனிதர்கள் வெறுக்கக் காரணம் என்ன? அவற்றின் உடலமைப்பை வைத்து அவை மிகவும் கொடூரமானவை, மனிதர்களைத் தாக்கக்கூடியவை என்ற தவறான முன்முடிவுதான் முக்கியக் காரணம். அந்தக் கணிப்பு தவறு என்பதை நிரூபித்தவர் டயான் ஃபாஸ்ஸி. எப்படி?
‘கொரில்லாக்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாமும் கொரில்லாவாக மாற வேண்டும்’ என்றார் அவர். அதாவது, கொரில்லாக்களைப் போலவே கைகளையும் கால்களாகப் பயன்படுத்தி குனிந்து நடப்பது, அவை எப்படி அமர்கின்றனவோ அதேபோல அமர்வது உள்ளிட்ட சின்னச் சின்ன நடவடிக்கைகள் மூலம் அவற்றின் நம்பிக்கையை நாம் பெற முடியும் என்று சொன்னார். மேலும், கொரில்லாக்கள் மூர்க்கக் குணம் கொண்டவையல்ல. அவற்றின் குடும்ப உறுப்பினர்களைக் காப்பதற்காக, தேவை ஏற்பட்டால் மட்டுமே அவை மனிதர்கள் உட்பட மற்ற உயிர்களைத் தாக்குகின்றன என்று நிரூபித்தார் ஃபாஸ்ஸி.
1967 முதல் 1983 வரை, சுமார் 16 ஆண்டுகள் ருவாண்டாவில் உள்ள வ்ருங்கா மலைப்பகுதியில் தான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் குறித்தும், கொரில்லாக்களுடனான உறவு குறித்தும் ‘கொரில்லாஸ் இன் தி மிஸ்ட்’ என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார் டயான் ஃபாஸ்ஸி. 1988-ம் ஆண்டு அதே பெயரில் அவரைக் குறித்து ஹாலிவுட் திரைப்படமும் வெளியானது.
சிம்ம சொப்பனம்!
வ்ருங்கா மலைப்பகுதி ருவாண்டா, உகாண்டா நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. உலகில் இந்த இரண்டு இடங்களில் மட்டும்தான் கொரில்லாக்கள் உள்ளன. 1960-களில், அதாவது டயான் ஃபாஸ்ஸி தன் ஆய்வுப் பணியைத் தொடங்கிய காலத்தில் சுமார் 475 கொரில்லாக்கள் மட்டுமே இருந்தன. 1980-களில் அந்த எண்ணிக்கை 254 ஆகக் குறைந்தது. இதற்குக் கள்ளவேட்டை மட்டுமே முழுமையான, முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது.
விலங்குகாட்சி சாலைகளில் காட்சிப்படுத்தவும், கொரில்லாவின் தலையைப் பாடம் செய்து வீட்டுச் சுவரில் அலங்காரப் பொருளாக மாட்டிவைப்பதற்காகவும் (ஆங்கிலத்தில் ‘ட்ராஃபி’ எனப்படும் வேட்டைப் பரிசுப்பொருள்) கொரில்லாக்கள் அதிக அளவில் கள்ளவேட்டையாடப்பட்டன. டயான் ஃபாஸ்ஸி இருந்தவரை, கரிஸோக் ஆய்வு மையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரில்லாக்கள் வேட்டையாடப்படுவது வெகுவாகக் குறைந்தது. காட்டுயிர்களைப் பிடிப்பதற்காகக் கள்ளவேட்டையாடுபவர்கள் மண்ணில் மறைத்து வைக்கும் பொருட்களை அவர்களுக்குத் தெரியாமல் சேதப்படுத்துவது, அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளால், கள்ளவேட்டைக் கும்பலின் எதிர்ப்பைச் சம்பாதித்தார் ஃபாஸ்ஸி. அந்த எதிர்ப்புக்கு அஞ்சாமல் தன் பணியைத் தொடர்ந்துவந்த அவர், கொரில்லாக்கள் பாதுகாப்புக்காக ‘டிஜிட் ஃபண்ட்’ என்ற அறக்கட்டளையை நிறுவினார். கள்ளவேட்டையாடப்பட்ட ‘டிஜிட்’ எனும் கொரில்லாவின் நினைவாகவே அந்தப் பெயரைத் தன் அறக்கட்டளைக்குச் சூட்டினார்.
1985-ம் ஆண்டு தன் அறையில் மர்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார் டயான் ஃபாஸ்ஸி. அவரது மரணத்துக்குக் கள்ளவேட்டைக் கும்பல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் சிலர், உள்ளூரைச் சேர்ந்த தங்கக் கடத்தல்காரர்கள்தான் காரணம் என்கிறார்கள். அவர் இறந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது மரணத்துக்கான காரணம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. அவருடைய இறப்புக்குப் பிறகு, அவர் தொடங்கிய அறக்கட்டளை ‘டயான் ஃபாஸ்ஸி கொரில்லா ஃபண்ட் இண்டர்நேஷனல்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, தற்போது 880 கொரில்லாக்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஃபாஸ்ஸியின் காலத்திலிருந்த கொரில்லாக்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். இதைத்தானே ஃபாஸ்ஸியும் எதிர்பார்த்தார்? இதற்காகத்தானே தன் வாழ்க்கையைக் கொடுத்தார்? அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்!
No comments:
Post a Comment