ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் நிறம் மாறி வருவதால், இந்த நீர் பாதுகாப்பானதா? என்கிற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் கீழ்மலை ப்பகுதி அடிவாரத்தில் அமைந் துள்ளது ஆத்தூர் நீர்த்தேக்கம். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்மட்டம் தற்போது மைனஸ் அளவுக்கு சென்றுவிட்டது.
இதனால் நீர்த்தேக்கத்தில் பள்ளங்களில் தேங்கியுள்ள நீரை மோட்டார் மூலம் இரைத்து குழாய் மூலம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் நீர்த்தேக்கப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தும் விநியோகம் நடக்கிறது.
இந் நிலையில், சில தினங்களாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதி களில் விநியோகிக்கப்படும் தண்ணீர் நிறம் மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இரு தினங்களுக்கு முன்பு 9-வது வார்டு பகுதியான கோவிந்தாபுரம், லெட்சுமணபுரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் துர்நாற்றுத்துடன் கலங்களாக வந்ததாகக் கூறி மாநகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இருப்பினும் இந்த குடிநீர் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுகிறது.
ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் நீர் வீரக்கல் பிரிவு அருகே காற்றுபோக்கி வழியாக வெளியேறுகிறது. இந்த நீரை வழியில் உள்ள வீரக்கல், வக் கம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பிடித்துச் செல்கின்றனர். தண்ணீர் பிரச்சினை உள்ள நிலையில் கிடைக்கும் நீரை சுகாதாரமானதா என்பதைக்கூட கருத்தில் கொள்ளாமல் குடங்களில் பிடித்துச் செல்கின்றனர்.
இந்த நீர் திண்டுக்கல் நகரில் தொடர்ந்து விநியோகிக்கப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை சோதித்து, குடிநீ ராகப் பயன்படுத்த ஏற்றதா என்பதை பரிசோதிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும், என திண்டுக்கல் நகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து திண்டுக்கல் மாநகராட்சி பொறியாளர் கணேசன் கூறியதாவது:
ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் தண் ணீர் வறண்டுவிடும் நிலையில் உள்ளதால் இதுபோன்று பாசான் கலந்த நீர் வருகிறது. தண்ணீரின் தன்மையை அவ்வப்போது அறிந்துதான் வருகிறோம். நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து இருந்தால் தான் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியும். தற்போது விநியோகிக்கப்படும் தண்ணீரால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்
No comments:
Post a Comment