இராக்கின் மோசூல் நகரிலுள்ள 840 வருடம் பழமை வாய்ந்த நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் உள்ள பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தை போலவே தோற்றத்தை உடையது இராக்கிலுள்ள 840 வருடங்கள் பழமை வாய்ந்த நூரி மசூதி. அத்தகைய பெருமைவாய்ந்த மசூதி தகர்க்கப்பட்டுள்ளது.
இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசூல் நகரில் ஐஎஸ் அமைப்பை அழிக்கும் பொருட்டு அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி அழித்ததாக செய்திகள் வெளியாகியது.
இதுகுறித்து இராக் ராணுவம் அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட தகவலில், "இராக்கின் மிகவும் பிரசித்தி பெற்ற பாரம்பரியமான சின்னமான நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகள் புதன்கிழமை இரவு வெடிகுண்டு வீசி அழித்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐஎஸ்ஸின் இந்தத் தாக்குதல் குறித்து இராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி ட்விட்டர் பக்கத்தில், "ஐஎஸ் அமைப்பு மோசூலில் நடத்த சண்டையில் தோற்றுவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் மோசூல் நகரை 2014-ம் ஆம் ஆண்டு கைபற்றியபோது இம்மசூதியிலிருந்துதான் ஐஎஸ்ஸின் தலைவராக இருந்த அபுபக்கர் அல்பக்தாதி அவ்வியக்கம் கைப்பற்றிய இடங்களை இஸ்லாமிய தேசம் என்று பெயரிட்டார்.
ஐஎஸ் மறுப்பு
இராக் ராணுவத்தின் இந்தக் குற்றச்சாட்டை ஐஎஸ் இயக்கம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஐஎஸ் இயக்கத்தின் இணைய பக்கத்தில், "அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் காரணமாகதான் மசூதி அழிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் "ஐஎஸ் குறிப்பிட்டது போல அந்த நேரத்தில் எந்த வான்வழித் தாக்குதலையும் நாங்கள் நடத்தவில்லை" என்று அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.