Wednesday 17 May 2017

தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள்!


நூறு ஆண்டுகளை கடந்துவிட்ட இந்தியத் திரைத்துறையில் சில நூறு பெண் இயக்குநர்கள் கூட கிடையாது என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது.
இந்த நிலை மாறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், திரைத்துறையில் நேரடியாக இயக்குநர் ஆகும் முயற்சிகள் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து காணப்படுவதாகவும் அத்துறையில் பணியாற்றுவோர் கூறுகின்றனர்.
வெற்றி விகிதம் மிகக் குறைவாக உள்ள திரைப்பட இயக்குநர் என்கிற துறையில், ஆண் - பெண் பாகுபாடு இல்லாத நிலை உள்ளது என்றும், திறமை, பொறுமை, விடாமுயற்சி ஆகியவை மட்டுமே வெற்றியை பெற உதவும் என்கிறார் இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் தாக்குப்பிடித்திருக்கும் இயக்குனர் சுதா கோங்கரா.
பல ஆண்டுகள் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுதா, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று திரைத்துறைகளிலும் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
இந்தியத் திரையுலகில், குறிஞ்சிப் பூ போல் எப்பொழுதாவது தோன்றும் பெண் இயக்குநர்களில் சுதாவும் ஒருவர்.
17 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றும் சுதா, குத்துச்சண்டையை மையமாக கொண்ட 'இறுதிச்சுற்று' என்கிற படத்தை இயக்கி முத்திரை பதித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள்!
திரைப்படத்துறையில் இயக்குநராக நீடித்து நிலைக்க ஆண் பெண் என்பதெல்லாம் ஒரு தகுதி கிடையாது என்றும்,ஒருவரது தனிப்பட்ட திறன் மட்டுமே அதை முடிவு செய்கின்றது என்கிறார் இயக்குநர் சுதா.
உதவி இயக்குநராக பயிற்சி எடுக்கும் காலத்தில் கூட பெண் என்பதற்கான சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்கவோ பெறவோ மாட்டேன் என்பதை, தனது வெற்றியின் ரகசியமாக கூறுகிறார் திரைப்பட இயக்குநர் சுதா.
பெண் என்பதால் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என கூறுவதை ஏற்கமாட்டேன் என்று கூறும் இயக்குநர் சுதா,அதற்காக விடாமுயற்சி செய்ய வேண்டும் என்கிறார்.
திரைப்படத் துறையில் வாய்ப்பு தேடும் தன் போன்ற பெண்களுக்கு, திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட வரும் பெருநிறுவனங்கள்தான் அதிக அளவிலான வாய்ப்புகளை வழங்குவதாகவும் இயக்குநர் சுதா தெரிவிக்கின்றார்.
பெண் இயக்குநர்களின் வருகை எண்ணிக்கை வருங்காலத்தில் பெருகும் என்பதே இயக்குநர் சுதா போன்றவர்களின் நம்பிக்கை.
இயக்குநர் சுதாவின் ஆரம்ப கால கட்டத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டு, அவர் திரைக்கதை அமைத்து அதை நடிகை ரேவதி இயக்கம் செய்து வெளியாகிய "மித்ர், மை ஃபிரண்ட்" என்கிற ஆங்கில மொழி திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
இயக்குநர் சந்திரா
முதல் படத்தை இயக்கும் சந்திரா
இயக்குநர் அமீர் போன்றவர்களால் தான் பெண்ணாக இருக்கும் பட்சத்திலும், தன்னால் இயக்குநராக முடிந்தது என்கிறார் "கள்ளன்" என்கிற தனது முதல் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் இயக்குநர் சந்திரா.
பெண் என்பதற்கான சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்காதது தான் தனது வெற்றியின் ரகசியம் என்கிறார் 'கள்ளன்' பட இயக்குநர் சந்திரா.
மற்ற துறைகளை காட்டிலும் திரைத்துறையில் வெற்றி வாய்ப்புகளை பெற கூடுதலாக சில ஆண்டுகள் பொறுமையாக காத்திருக்க வேண்டியது மிக அவசியம் என்றும் கூறும் இயக்குநர் சந்திரா, தாக்குப்பிடிக்கும் திறன்தான் முக்கியமான தேவை என்றும் குறிப்பிடுகிறார்.
தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள்!
விடாமுயற்சியுடன் வேலை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதை முதலில் குடும்பத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்றும், அவர்களின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி என்பது சாத்தியமாகிறது என்று இயக்குநர் சந்திரா தெரிவிக்கின்றார்.
நிறைய பெண்கள் திரைப்படத்துறைக்கு வர வேண்டும் என கூறி விருப்பம் தெரிவிக்கும் இயக்குனர் காயத்ரி புஷ்கர்,இதன் மூலமாக பெண்களின் பார்வையும் கருத்துக்களும் கூட திரைப்படங்களில் பிரதிபலிக்கும் என்கிறார்.
இயக்குநர் காயத்ரி
"ஓரம் போ", "வ" போன்ற படங்களை தனது கணவர் புஷ்கருடன் இணைந்து இயக்கியுள்ள காயத்ரி, தற்போது நடிகர்கள் மாதவன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகும் "விக்ரம் வேதா" என்கிற திரைப்படத்தை, மீண்டும் தனது கணவருடன் இணைந்து இயக்கி வருகிறார்.
இயல்பாகவே பெண்களுக்கு சிறந்த படைப்பாற்றலும், பல பணிகளை ஒரே நேரத்தில் கையாள கூடிய திறனும் உள்ளது என்று கூறும் காயத்ரி புஷ்கர், இதன் காரணமாகவே பெண்களால் திரைப்பட இயக்குநராக சிறந்து விளங்க முடியும் என்றும் குறிப்பிடுகிறார்.
மாதவன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகும்
Image captionமாதவன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகும் "விக்ரம் வேதா"
கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் திரைத்துறையில் டி.பி.ராஜலக்ஷ்மி முதல் பெண் இயக்குநராகவும், அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாத்திமா பேகம் என்பவர் இந்திய திரையுலகின் முதல் பெண் இயக்குநராகவும் அறிமுகமானார்கள்.
இருந்தபோதும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தான் அதிக அளவிலான பெண்கள் திரைத்துறையில் இயக்குநர்களாக ஈடுபட கூடிய வாய்ப்புகள் உருவாகி வருகிறது.

No comments:

Post a Comment