மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த ஓவியம் ஒன்று நியு யார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 110.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய்.
ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய மிகவும் விலையுயர்ந்த ஓவியத்தை காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலையாகும்.
தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்துள்ள நபர்தான் ஒரு ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் ஓவியத்தையும் விலைக்கு வாங்கியுள்ளார்.
மேலும், அமெரிக்காவை சேர்ந்த ஓவிய கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போன படைப்பாகும். மேலும், பல சாதனைகளையும் இந்த ஓவியம் முறியடித்துள்ளது.
கருப்பின ஓவியர் ஒருவரின் எந்தக் கலைப்படைப்பிலும், மிக அதிக விலை போன படைப்பு இது. மேலும் மிகப்பெரிய தொகையை ஈட்டியுள்ளது மட்டுமின்றி 1980ம் ஆண்டிலிருந்து 100 மில்லியன் டாலருக்கு அதிகமான தொகைக்கு ஏலம் போயுள்ள முதல் ஓவியம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
பெயரிடப்படாத இந்த ஓவியம் ஆயில் ஸ்டிக், அக்ரிலிக் மற்றும் ஸ்ப்ரே வகை பெயிண்ட்களை கொண்டு வரையப்பட்டுள்ளது.
ஓர் மண்டையோடு வடிவை கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது.
ஷான் மிஷெலின் ஓவியத்தை 41 வயதுடைய ஜப்பானிய ஃபேஷன் தொழில்முனைவர் யுசாகா மேஸாவா ஏலத்தில் எடுத்துள்ளார்.
யுசாகா தான் பிறந்த நகரான சிபாவில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருகிறார்.
சோத்பிஸ் ஏல நிறுவனத்தில் இந்த ஓவியத்திற்காக சுமார் 10 நிமிடங்களுக்கு நடைபெற்ற ஏலம் மிகவும் பரபரப்பாக சென்றது.
இந்த படைப்பு தொலைப்பேசி வழியாக யுசாகாவிற்கு விற்கப்பட்ட போது அறையில் மகிழ்ச்சியும், கைத்தட்டல்களும் ஒலித்தன.
No comments:
Post a Comment