சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடைய வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது காட்டுக்குள் மறைந்திருந்த அடையாளம் தெரியாத யாரோ நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் வாகனம் சேதமடைந்தது.
அதில் பயணம் செய்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து, உடனடியாக பெரும் எண்ணிக்கையிலான ராணுவத்தினர் அவிடத்திற்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
அதிகாலையிலேயே, வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறும் வெளியில் வரவேண்டாம் என குடிமனைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக ராணுவத்தினர் அறிவித்தனர்.
வெளியில் வந்து பார்த்தபோது, ராணுவத்தினர் வீதிகளில் காணப்பட்டனர்.
காவல் துறை அதிகாரிகள் மீது யாரோ துப்பாக்கிப்பிரயோகம் செய்ததனால்தான் ராணுவத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றனர் என தெரிந்து கொண்டோம் என ஊர்வாசிகள் தெரிவித்தனர்.
காலை எட்டு மணிவரையில் நீடித்த இந்த ராணுவ சுற்றிவளைப்பின்போது அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ராணுவத்தினரின் தேடுதலின்போது, எவரும் கைது செய்யப்படவில்லை. ஆயினும் காட்டுப் பிரதேசங்களில் தொடர்ந்து தேடுதல் நடத்தப்படுகின்றது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கழிந்த நிலையில் ராணுவத்தினர் இந்தப் பகுதியில் முதன் முறையாக யுத்த காலத்தைப் போன்று சுற்றி வளைப்பு தேடுதலில் ஈடுபட்டிருந்தது எங்களுக்கு அச்சமாக இருந்தது என ஊர் மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment